தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே1 தேதிகளில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் புயலுடன் கூடிய பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை உதவி இயக்குனர் பால சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் தென் தமிழக பகுதியில் புயலுடன் கூடிய காற்று, வீசக்கூடும் என்பதால், ஆழ் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இன்றே கரை திரும்ப வேண்டும்.
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தென்மேற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், மீன்பிடி இறங்குதள மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், அனைத்து கிராம மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை மையம் விடுத்துள்ள வேண்டுகோளை தவறாது கடைபிடிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.