தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டதால், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும், கூட்டத்தை பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் புறக்கணித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதனால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த கெபிஸ்டன் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடைபெறுகிறது. அதேபோல், அந்த கூட்டமும் வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது” என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் - அதிமுகவினர் சபாநாயகரிடம் கடிதம்!
மேலும், “இன்றைக்கு நடைபெற்ற கூட்டத்தில் மீனவர்கள் கடலோர ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பானை சிஏஜி குறித்து பேசுவதற்காக வந்திருந்தனர். ஆனால், அவர்களில் எவருமே கடலோர ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பானை குறித்து விளக்கம் சொல்ல முன் வரவில்லை. மேலும், தற்போது வரக்கூடிய புதிய சட்டங்கள் அனைத்துமே மீனவர்களுக்கு எதிராக இருக்கின்றன.
கடலோர ஒழுங்குமுறை ஆணைய கமிட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் யார் என்ற விபரங்களை மாவட்ட நிர்வாகம் முறையாக மீனவர்களுக்கு தெரிவிக்கவில்லை. குறிப்பாக, தன்னிச்சையாக மாவட்ட நிர்வாகம் அவர்களுக்குத் தேவையான மூன்று நபர்களை தேர்வு செய்து உள்ளது.
அதனால் இந்த குழுவை கலைக்க வேண்டும். கடற்கரை கிராம மக்களை அழைத்து அவர்களிடம் ஒப்புதல் பெற்று, மீண்டும் இக்குழுவை அமைக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக அடுத்த கட்டமாக தொடர்ச்சியான போராட்டங்கள், மீனவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் புதிய சிக்னலை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!