தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளை பாதுகாப்பதற்காக கால் மட்டும் வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுகின்ற முகாம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. 21 நாட்களில் நடைபெறும் இந்த முகாமில் உள்ளாட்சித் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை இணைந்து செயல்பட உள்ளது. மேலும் இந்த கோமாரி நோய் வந்தால் கால் புண்ணாகும், வாய்ப்புண்ணாகும். பின்னர் மாட்டிற்கு பால் கரப்பு குறைந்து விடும்.
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும்" என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீன்வளங்களை முறையாக பயன்படுத்தவில்லை என்று ஆளுநர் கூறியதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் மீன்வளத்துறை நல்ல முறையிலும், மீன்வள நலனுக்காக அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு என்னென்ன பணி, நல உதவிகளை செய்ய வேண்டுமோ அது அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. மீன் வளர்ச்சியில், மீன் குஞ்சு உற்பத்தி எங்கு பெருக்க வேண்டுமோ, அதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகின்றார். அந்த வகையில் இது பெரிதா? அது பெரியதா? என்று வாதிடுவதற்கு அல்ல, தமிழகம் உயர்வதற்கு உண்டான வழிவகைகளை முதலமைச்சர் மீன் வளர்ப்பிற்கு தந்திருக்கின்றார்" என்று தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவது குறித்து கேட்ட கேள்விக்கு? அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "சட்டப்படி சந்திப்போ" எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் எப்படி இருக்கும் என தெரியாதா...?" - சீமான்!