மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை சார்பில் மீன் வளர்ப்போர் தினம் தூத்துக்குடி அரசு மீன்வளக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா தலைமை தாங்கினார். மீன்வளக் கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறந்த முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி பெற்ற நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி தூத்துக்குடி அரசு மீன்வள மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வளர்ப்பது குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் மீன் வளர்ப்பு முறை குறித்து மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய நாட்டு கடலில் மீன் வளம் குறைவதை தடுப்பதற்கு நாம் இங்கிலாந்து முறைப்படி மீன் வளர்ப்பு முறையை ஊக்குவிப்பது அவசியம்.
அதன்படி குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். இந்த மீன் வளர்ப்பு முறையை செயல்படுத்த அரசு பல்வேறு உதவிகளை வழங்குகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபடும் நபர்களுக்கு மானியங்களும், சலுகைகளும் மத்திய, மாநில அரசுகள் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் வழங்கி வருகின்றன.
இதுதவிர குளங்கள் தூர்வாரும் பணி தற்பொழுது நடைபெறுவதால் தூர்வாரப்படும் குளங்களில் தண்ணீரை தேக்கி மீன்களை வளர்ப்பதற்கு உண்டான நடைமுறைகளிலும் ஈடுபடலாம் " என்றார்.