தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமாள தொல்லியல் பொருட்கள் கிடப்பதாகவும், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இதனையடுத்து கடந்த 2019 முதல் தொடர்ந்து மூன்று கட்டங்களாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தன. குறிப்பாக முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த நெல்மணியின் வயது 3,200 ஆண்டுகள் பழமையானது என கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அனைவரையும் சிவகளை பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
இதற்கிடையில் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2 கட்டங்களாக நடந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது அந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் அதே குழியில் தான் உள்ளது. குழிகளும் மூடப்படவில்லை. இதனால், சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக கூறி வந்தனர். தற்போது சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழியின் மேல் பகுதியில் முதல் கட்டமாக 23 லட்ச ரூபாய் மதிப்பில் தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த பகுதியில் 7-க்கு 13 மீட்டர், 7-க்கு 11 மீட்டர் என இரண்டு இரங்களில் ஷெட் அமைக்கப்பட உள்ளது. மேலும், பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக 10-க்கு 6 மீட்டர் அளவில் ஒரு ஷெட்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று கூறப்பபடுகிறது.
தற்போது வரை சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்காத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாரம் காவல் துறைக்கா? வருவாய்த் துறைக்கா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விவாதம்!