தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின் (45). பைனான்சியராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மார்ட்டின் தனது சகோதரரான மணிகண்டன் (37) என்பவருடன் இருசக்கர வாகனத்தின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாபு சுல்தான் (50), மைதீன் மீரான் (33), புகாரி (29), ரஸ்ருதியின் (29), பிலால் (23), பாரீஸ் (25), காதர் (28) ஜிந்தா (27), மகதும் (63), செந்தில் என்ற பெட்ரோல் செந்தில் (45), அப்துல் சமது (45), மேலும் சிலர் இணைந்து மார்ட்டினை வழிமறித்து அரிவாள், கத்தியால் தாக்கி கொலை செய்து பின் அங்கிருந்து தப்பியோடினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தான்குளம் காவல் துறையினர், மார்டினின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மார்ட்டின் கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
இந்தக் கொலை வழக்கில் ஈடுப்பட்டவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். அதன் அடிப்படையில், பாபு சுல்தான், புஹாரி, ரஸ்ருதியின், பாரீஸ், ஜிந்தா மற்றும் அப்துல் சமது ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.