தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில் உளுந்து, பாசிப்பருப்பு போன்ற பயிர்களை பயிரிட்டிருந்தனர். இந்த பயிர்கள் தற்போது காய்த்து அறுவடை செய்யும் நேரத்தில், திடீரென பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான உளுந்து, பாசி பயிர்கள் தற்பொழுது செடியிலேயே முளைத்து உள்ளது. மேலும், மழைநீர் குளம் போல் தேங்கி, பயிர்களை மூழ்கடித்து உள்ளது என விவசாயி வேதனை தெரிவித்தார்.
மேலும் விவசாயி ஒருவர் பேசுகையில், “பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், அறுவடைக்குத் தயாராகியுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சுமார் 20 ஏக்கரில் நெல் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அரசு நிதியுதவி செய்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். மானவாரிப் பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, பாசி பருப்பு உள்ளிட்ட பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளது. பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் சரியான முறையில் கணக்கெடுப்பு எடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?