தூத்துக்குடி: ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களால் திரும்பப்பெற கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் அனைத்திந்திய விவசாயிகள் சங்கம், ஓட்டப்பிடாரம் தாலுகா சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பூங்கா அருகே மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றிய அரசின் அராஜகம்
இந்தப் போராட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றுவதில் முனைப்பாக இருந்து வருகிறது.
நாட்டில் நிலவிய கரோனா கால ஊரடங்கை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் திருத்தச்சட்டத்தை ஒன்றிய அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளது.
வேளாண் திருத்தச்சட்டம் குறித்து விவசாயிகளிடமோ, பொதுமக்களிடமோ, விவசாய சங்கங்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியாளர்களிடமோ எவ்வித கருத்துக்களும் கேட்கப்படாமல், அராஜக போக்குடன் திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
விளைபொருள்களை தான் தினம் உண்ணுகிறார்கள்
இதனால் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளை குண்டர் என்பதும், அவர்களுக்கு எதிராக சட்டரீதியான வழக்குகளை பதிவு செய்வதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது.
விவசாயிக்கெதிரான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியவர்களும் விவசாயி தந்த விளைபொருள்களை தான் தினம் உண்ணுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, தலைநகர் டெல்லியில் 120 நாள்களுக்கும் மேலாக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அரசு இந்த சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், நாடு தழுவிய அளவிலான பெரும் மக்கள் போராட்டம் நடைபெறும்” என்றார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதேப்போல, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்திந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சிஐடியு, எல்.பி.எஃப், பி.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் கொள்கையின் மூலமாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வேலை இழந்த தொழிலாளர்கள்
முதலாளித்துவத்துக்காக பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் வேலை நீக்கம், பொது பங்குகளை விற்கும் முடிவுகளால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்து எதிர்காலத்திற்கு வழியற்று நிற்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
பெரும் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக மட்டும் செயல்படும் ஒன்றிய அரசின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவிலான போராட்டம் தொழிற் சங்கங்களின் சார்பில் அடையாள போராட்டமாக நடைபெற்று வருகிறது.
எனவே தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து, தொழிலாளர்களுக்கு விரோதமாக இயற்றப்பட்டுள்ள சட்டங்களை இந்த அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை- சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்- ஓபிஎஸ் அதிரடி