தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்விக்குப் பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டிலேயே அப்ளாடாக்சின் எம்-1 என்ற நச்சுத்தன்மை கொண்ட பால், தமிழ்நாட்டில் தான் அதிகம் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பாலினை பருகினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், பாலில் நச்சு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், முறையாக ஆய்வு செய்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், எனவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மதிமுக விவசாயிகள் அணியைச் சார்ந்தவர்கள் அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே அப்ளாடாக்சின் எம்-1 என்ற நச்சுத்தன்மை கொண்ட பால், தமிழ்நாட்டில்தான் அதிகம் விற்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மதிமுக விவசாயிகள் அணியினர் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வெங்காய விலையேற்றம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு