தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பாண்டு ராஃபி பருவத்தில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புரட்டாசி பட்டத்தில் டெல்டா மாவட்டங்கள், சென்னை நீங்கலாக, பிற மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையை நம்பி மானாவாரிசாகுபடி விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை நீர்நிலைகளில் இருந்து எடுத்து நிலங்களுக்குப் பயன்படுத்தினர். வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தினர். எனினும், கால்நடைகள் வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் கடந்த 25ஆண்டுகளாக ரசாயன உரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரசாயன உரத்தின் தேவை அதிகரித்ததால், ஒவ்வொரு ஆண்டும் உரம் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து, உரம் விலையும் உயருகிறது. அடி உரம் டிஏபி, மானியம் நீங்கலாக 50 கிலோ மூட்டை ரூ.1,350க்கும், யூரியா விலை அரசு மானியம் போக 45 கிலோ மூட்டை ரூ.275க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, மானியத்தில் வழங்கப்படும் டிஏபி, யூரியா உரம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் ஆதார் அட்டையை காட்டுவதுடன் பிஓஎஸ் (பாயின் ஆஃப் சேல்ஸ்) இயந்திரத்தில் கைரேகைப் பதிவு செய்து பெற வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் உரம் வழங்கப்படுவதுடன், வணிக ரீதியான விற்பனை தடுக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பும் தவிர்க்கப்படுகிறது.
இந்நிலையில் உரம் விநியோகத்துக்கு அண்மையில் மத்திய அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் தங்கள் சாதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயி பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இதில் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்ற விவரத்தைப் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உரம் வாங்கும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சாதிக்கு ஏற்றபடி உர மானியம் விடுவிக்கப்படும்பட்சத்தில், திட்டமிட்டு சாகுபடி பரப்பை பறிக்கும் செயலாக கருதப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தனியாரை ஊக்குவிக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக சந்தேகம் எழுவதாக கூறும் விவசாயிகள், வருங்காலத்தில் ஏழை எளிய நடுத்தர விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனக் கூறுகின்றனர். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறும் அரசு அதை நசுக்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதி பிரிவை குறிப்பிடும் நடைமுறையை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல் - அண்ணாமலை அறிக்கை