தூத்துக்குடி: கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், வடமலாபுரம், மேலகரந்தை, எட்டயபுரம் ஆகியப் பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் (குளிர் காலப்பயிர்கள்) சுமார் 1.40 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், உளுந்து, பாசி, கம்பு, மிளகாய் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
இவற்றில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் என சுமார் 35ஆயிரம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். படைப்புழு தாக்குதல் மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களை தாக்கக்கூடியது.
இப்பயிரில் இளம் இலைகளின் அடிப்பகுதியில் முட்டை குவியல்கள் காணப்படுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும். இதனால், மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேளாண்துறை அலுவலர்கள், இதனைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உயிரோடு இருந்த முதியவருக்கு இறப்புச்சான்று: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு