தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், மே 19ஆம் தேதி நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
அந்தவகையில், தூத்துக்குடி தெய்வச்செயல்புரம் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஸ்டெர்லைட் போராட்டங்கள், நிலத்தடி நீர், ஹைட்ரோகார்பன் போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அவர்,
- மானாவாரி நிலங்கள் பயன் பெற தாமிரபரணி நதியிலிருந்து கால்வாய் அமைத்து பாசன நீரமைப்பு பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்,
- விவசாயிகளின் வாழ்வாதாரங்களை காக்க ஒருங்கிணைந்த விவசாய மண்டல நிலையங்கள் ஏற்படுத்தப்படும்,
- புதியம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஜவுளித் தொழில் பூங்கா அமைக்கப்படும்
உள்ளிட்ட பல்வேறு அம்ச செயல் திட்டங்களை ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செய்வதாக வாக்குறுதிகள் அளித்து வருகிறார்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் உள்பட மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.