தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேவுள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாணவி சுதா. தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த நிலையில், அவருக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு படிக்க நிதி உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை சுதாவின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு கூறியதாவது, 'அரசியல் தொடர்பாக ரஜினி எடுத்துள்ள முடிவு அவரது சொந்த முடிவாகும். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் உரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான்.
சசிகலா குறித்து பேச்சு:
சசிகலா செல்போனில் தொடர்புகொண்டு பேசியவர்களில் ஒருவர் கூட அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவர்களிடம் எல்லாம் பேசி அவர் தரத்தைக் குறைத்துக் கொள்கிறார்.
நான்கு ஆண்டுகாலம் சிறையிலிருந்த காரணத்தால், நாட்டில் யார் எந்தக் கட்சியில் உள்ளார் என்பது அவருக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன்.
அமமுக-காரரிடம் பேசிவிட்டு அதிமுகவை வழிநடத்தப்போகிறேன் என்று சொன்னால் எப்படி? அமமுகவை வழி நடத்தப் போகிறேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்திலும் சசிகலா பேசிய நான்கு பேரும் அமமுகவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் நான்கு பேரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தினகரனுக்கு முழுமையாக வேலை பார்த்தவர்கள். இவர்களிடம் பேசிவிட்டு அதிமுகவை வழிநடத்தப்போகிறேன் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இனிமேல் அவர் தெரிந்து கொண்டுப் பேசினால் நன்றாக இருக்கும்' என்றார்.
இதையும் படிங்க: திமுக பிரிவினைவாதத்தை தூண்டுகிறது- கருப்பு முருகானந்தம்