தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது,“தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்பு, வ.உ.சி. கல்லூரி ஆகியவை இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்தும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டு இந்த முகாம் தூத்துக்குடியில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.
10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் வரை, இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு தேவையில்லை. ஆனால், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு எடுத்து, தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க : ‘இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் என்ன சிக்கல்?’ - ஹெச். ராஜா பதில்