தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கணவரை இழந்து தனியாகத் தனது மகள், மகன் உடன் வசித்து வருகிறார். இதில் முதல் பெண் பேச்சித்தாய் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் ஐயப்பன் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காத பெண்மணி லட்சுமி, தனது வீட்டில் இருந்தபடியே முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், இவர்களின் வீட்டில் மின்சார இணைப்பு இல்லாமல் இருந்துள்ளது. இதனால், 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி பேச்சிதாயும், அவரது தம்பி ஐயப்பனும் இருண்ட வீட்டிற்குள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் படித்து வருகின்ற நிலைமை இருந்தது. இவ்வாறே வீட்டில் நிலவும் வறுமை காரணமாக, கடந்த 17 ஆண்டுகளாக அவர் தனது பள்ளிப் படிப்பைப் படித்து வந்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் இவர்களுடைய வீட்டிற்கு அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் முறுக்கு வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வருவதைக் கண்டு, இந்த காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று வருந்தி உள்ளார். அதன் பின் பின்னர் உடனே, அதனை வீடியோவாக எடுத்து மாவட்ட ஆட்சியர் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: "ஆபிஸ் பக்கம் போகவே பயமா இருக்கு" அலறும் வார்டு உறுப்பினர்கள்.. கரூரில் நடந்தது என்ன?
இதைப் பார்த்தவுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையாவை தொடர்பு கொண்டு அந்த வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் நேற்று (மார்ச்.13) மாலையில், வட்டாட்சியர் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் அந்த வீட்டிற்கு விரைந்தனர். அத்தோடு, உடனடியாக வீட்டிற்கு முழுமையாக வயரிங் செய்து புதிய மின் மீட்டாரை மாற்றி 3 மணி நேரத்தில் மின்சாரத்தை வழங்கி அசத்தினர்.
இதனை தொடர்ந்து, வீட்டில் மின் இணைப்பைப் பார்த்த உடன் பேச்சித்தாயும், ஐப்பனும் கண்களில் மகிழ்ச்சி பொங்க புன்னகை உடன் அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக அந்த வீட்டிற்குத் தேவையான மின்விசிறி உள்ளிட்ட உபகரணங்களையும், மளிகை பொருட்களையும் வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பள்ளிகளில் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஆரம்பம் ஆகிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினராலும் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஈஸியாக தேர்வு எழுத டிப்ஸ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!