தூத்துக்குடி தாளமுத்துநகர் செல்வநாயகபுரம் டி.எம்.சி. காலனியைச் சேர்ந்த சங்கர் (37), எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலை செய்துவந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும், 5 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றின் கைப்பந்து மைதானத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சரிந்ததில் சங்கர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த அவரது உறவினர்கள், சங்கரின் இறப்புக்கு நீதி கேட்டும், தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!