மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ரோச் பார்க் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், முறையான ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 52 ஆயிரத்து 770 எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம் எடுத்து வந்தவர் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜராஜன் என்பதும், அங்கு அவர் மோட்டார் உதிரிப்பாகம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் வணிக நோக்கத்திற்காக வந்துவிட்டு, ஈரோடு திரும்புவதாகக் கூறினார். மேலும், அவரிடம் இருந்த பணத்திற்கு எந்த வித ஆவணங்கள் இல்லாததால் அப்பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்த பணத்தைத் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜான்சன் தேவ சகாயத்திடம் ஒப்படைத்தனர்.