ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.
இதில் 20 காவல் ஆய்வாளர்கள், 4 டிஎஸ்பிக்கள், 2 ஏடிஎஸ்பிகள், தூத்துக்குடி எஸ்பி, நெல்லை சரக டிஎஸ்பிகள் தென்மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே நடைபெற்றது. இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.