தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 174 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 403 ஊராட்சித் தலைவா்கள், 2,943 கிராம ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 3,537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 119 போ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 1,113 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 2,057 பேர், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 6,518 பேர் என மொத்தம் 9,807 போ் மனுத்தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனையில், மொத்தம் 144 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன், 1,396 போ் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.
மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு ஒருவா், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 34 பேர், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 1,095 போ் என மொத்தம் 1,130 பேர் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். தற்போது, 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 87 பேரும், 173 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 829 பேரும், 369 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,393 பேரும், 1,841 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 4,828 பேருமாக மொத்தம் காலியாக உள்ள 2,400 பதவிகளுக்கு 7,137 போ் போட்டியிடுகின்றனா். இதில், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகள், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் ஒரு வார்டு என மாவட்டத்திலுள்ள 7 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
பிச்சிவிளை ஊராட்சித் தலைவா் பதவி சுழற்சி முறையில் தற்போது பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தப் பதவிக்கு சாமுவேல்நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரி மற்றும் மறவன்விளையைச் சோ்ந்த சுந்தராச்சி ஆகியோர் போட்டியிடுகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, `பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தம் 785 வாக்குகள் உள்ளன. இதில், இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 6 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்கள். மற்றவர்கள் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். இதில், தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால், தோ்தலை புறக்கணிக்கும் வகையில் மொத்தமுள்ள 6 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதேபோல, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சியில், 6ஆவது வார்டு பகுதியான தாய்விளை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். பல போராட்டமும் நடத்தினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 10 மாதங்களாக ரேஷன் பொருள்களும் வாங்காமல் இருக்கிறோம். பகுதிநேர ரேஷன்கடை அமைத்து தருவது குறித்து அலுவலர்கள் எந்தவித உத்தரவாதமும் தராததால் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை” என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, ``சாத்தான்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் 6ஆவது வார்டு பகுதியான தாய்விளை கிராம மக்கள் பகுதிநேர ரேஷன் கடை வேண்டுமென கோரிக்கை வைத்தனா். இதுதொடா்பாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிச்சிவிளை ஊராட்சியைப் பொறுத்தவரையில், 6 வார்டுகளிலும் ஒருவா் கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யாதது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் எந்தவித காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. எந்தவித கோரிக்கையையும் முன் வைக்கவில்லை” என்றார்.