ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் ,18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ஆம் தேதி மையப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சி கல்லூரி மாணவ மாணவிகள் முகத்தில் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொண்டு நூதனமான முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
மாணவ மாணவிகள் தங்களின் முகங்களில் இந்தியா வரைபடம், தேர்தல் ஆணைய சின்னம், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக சிறிய, சிறிய படங்கள் உட்பட பல்வேறு ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுபோல பானைக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்டவற்றை கல்லூரி மாணவ, மாணவிகள் மேற்கொண்டனர். நாளை வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தனர்.