கன்னியாகுமரி: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக, சார்பதிவாளர் தானுமூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் சைமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர், தாணுமூர்த்தி (58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். தாணுமூர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினம் அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில், அங்கிருந்த 114 பவுன் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தாணுமூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதை அடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.7) காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வேலூரில் ஓடும் காரில் பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!
நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தியின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்று, வீட்டில் இருந்த தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் கேட்டறிந்தனர். காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், திங்கள்நகர் காந்தி நகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் இருந்த தாணுமூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வீட்டிலிருந்த சில ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், அது குறித்து விசாரித்து வருகின்றனர். எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது, வருமானத்துக்கு அதிகமாக பினாமி பெயரில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்து இந்த சோதனை முடிவில் தெரிய வரும் என கூறப்படுகிறது.