தூத்துக்குடி: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன், காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர், புன்னக்காயல், ஆலந்தலை, தருவைகுளம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 800 விசைப்படகுகளும், மூவாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகுகளும் இயக்கப்படாமல் உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதையும் படிங்க: மீனவர் மீது கும்பல் தாக்குதல்: மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை