தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்திவந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜூன் 26ஆம் தேதி ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகியோர் லாக்கப் சித்ரவதையில் இறந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். அதுகுறித்து மீண்டும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையான குற்றம் எதுவும் புரியவில்லை. கரோனா சூழலில் அரசாங்கம் அறிவித்துள்ள நேரத்தை கடந்து சிறிது நேரம் கடையை திறந்துவைத்ததுதான் அவர்கள் செய்த தவறு. இந்த வழக்கில் நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர் என யாரும் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர் கடமை தவறிவிட்டார்.
இது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெறும் முதல் வன்முறை சம்பவமல்ல, ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மரணத்துக்கு பிறகு மற்றொரு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேய்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற நபரும் சாத்தான்குளம் காவலர்களின் சித்ரவதையால் உயிரிழந்துள்ளார். எனவே இந்த சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.