தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி, வில்லிசேரி உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு, முடித்திருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டாஸ்மாக் கடைகளை எப்படி நடத்துவது, இன்னும் அதிகமான மக்களை டாஸ்மாக் கடைக்கு வரவழைப்பது குறித்து தமிழ்நாடு அரசு அதிக அக்கறை காட்டுகிறது.
இது கரோனா பாதிப்பைதான் அதிகப்படுத்தும். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டுவருவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. வெளிநாடுவாழ் தமிழர்கள் போதிய பணம் இல்லாமல் உணவின்றித் தவித்துவருகின்றனர். அவர்கள் தமிழ்நாடு திரும்ப மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு மாநில அரசின் உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டுவருகிறது. மத்திய அரசின் இந்தத் தவறான செயலை அனைத்து மாநில அரசுகளும் கண்டிக்க வேண்டும்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் பார்க்க: இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; ஒடிசாவில் 102 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று