தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. இளைஞர்கள், பெண்கள் திமுகவில் இணைகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேரதலில் திமுக வெற்றி பெறும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஸ்டாலின் அனுமதி அளித்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், 1994ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்ததே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.
தூத்துக்குடி மாவட்டதில் நடைபெறும் அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. அதிமுக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெறவில்லை. அதேபோல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த விவிடி சிக்னல் மேம்பாலம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் அதிகமுக அரசு நிறைவேற்றவில்லை.
தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை ஆதரிக்கிறார். விவசாய கடன் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் கூறியும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்" என்றார்.