தூத்துக்குடி மாவட்டம் கலைஞர் அரங்கில் திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அறிந்தும் அறியாதது போல் உள்ளனர். நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ளதால் என்னுடைய பணிகளையும் ஆளுங்கட்சியினரின் தடுக்கின்றனர்.
மாநகர் பகுதிகளில் குறைந்த குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலமே தண்ணீரை அகற்றுகிறார்கள். அவையும் சரிவர வேலை செய்யாமல் போகிறது. எனவே, வெள்ளநீரை வெளியேற்ற துறைமுக சபையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மழை நீர் சூழ்ந்துள்ள நேதாஜி நகர், கதிர்வேல்நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி சார்பாக நடைபெறும் அனைத்து பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நெருங்கியவர்கள்.
தூத்துக்குடியில் மழை காலத்திற்கு முன்பே அடிப்படை பணிகளை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தூத்துக்குடி வெள்ளத்தில் மிதக்கிறது. எனது சொந்த செலவில் 15 இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் மாநகராட்சி பகுதிகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது" என்றார்.
ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கையை வெட்டுவோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஒருமையில் பேசியது மட்டுமின்றி, அவர் பாட்டுக்கு குறைத்து விட்டு போகட்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆ. ராசாவின் கை வெட்டப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ