தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்னும் திட்டத்தின்கீழ் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மருந்து, மாத்திரைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் செய்ய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.
இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி 'ஒன்றிணைவோம் வா' திட்ட முன்னெடுப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நலத்திட்ட உதவிகள் செய்துவருகிறோம். அரசால் செய்யமுடியாத உதவிகளை திமுக கழகம், மக்களுக்குச் செய்துவருகிறது.
அதில் அரசால் செய்யத்தக்க உதவிகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை திமுக தலைவர் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிவருகிறோம். இதில் மூன்றாயிரத்து 123 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
தற்போது இரண்டாம் கட்டமாக 17 ஆயிரத்து 453 மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தாலுகா வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: விளைநிலங்களில் கெயில் குழாய் பதிப்பு: நாகை விவசாயிகள் எதிர்ப்பு