தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் தூர் வாராமலிருப்பது, தெருவிளக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தர வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவை பலமடங்கு அலுவலர்கள் உயர்த்தப்பட்டுள்ளதை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ஆளும் அதிமுக அரசு தமிழ்நாட்டையே பாதி விற்றுவிட்டது. எட்டு வழிச்சாலையைக் கொண்டு வருவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படுகின்றனர். ஒரு குடம் நீர் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலை உள்ளது. மக்கள் பிரச்னைக்கு எந்தச் தீர்வையும் செய்ய இந்த அரசு தயாராக இல்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில்லை. அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை.
மக்கள் கட்ட முடியாதபடி சொத்துவரி, குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சொத்துவரி உயர்வை கண்டித்து நடைபெறும் இது அடையாள ஆர்ப்பாட்டம்தான். மக்கள் பிரச்னை தீரும்வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விவசாயக் கடனை திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் சொத்தை விற்று தான் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேட்டதற்கு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை எனில் பின்னர் எதற்காக பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கவேண்டும் என்றார்.