தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தின் கீழ் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மருந்து, மாத்திரைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் செய்யத்தக்கவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரின் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஒன்றிணைவோம் வா திட்ட முன்னெடுப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். அரசால் செய்ய முடியாத உதவிகளை, மக்களுக்கு திமுக செய்து வருகிறது.
இதுவரை 15 லட்சம் அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன. அதில், அரசின் உதவிகளை எதிர்பார்க்கும் மக்களின் கோரிக்கைகளை கழகத் தலைவர் ஆணைப்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 123 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.