தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 13ஆம் தேதி யாகசாலையுடன் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. ரூபாய் 100ஆக இருந்த விஸ்வரூப தரிசனக் கட்டணம், ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சாதாரண நாளில் ரூபாய் 500 ஆகவும், விஷேச நாளில் ரூபாய் 2 ஆயிரமாக இருந்த அபிஷேக தரிசனக் கட்டணம், தற்போது ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 100 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசனக் கட்டணம், தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 2022இல் நிர்ணயித்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, தரிசனக் கட்டண உயர்வைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட தரிசனக் கட்டணத்தை உடனடியாக குறைக்கக் கோரியும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்டத் தலைவர் தங்கமனோகர் உள்பட இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயில் நிர்வாகம் அநியாயமாக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக மண்ணை அள்ளித் தூவினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: "பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்" - திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை பாராட்டு!