தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (செப்.24) விடுமுறை தினத்தை முன்னிட்டு, குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சிறந்த ஆன்மீக ஸ்தலமாகவும், கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால், இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு! வானுயரும் தமிழர் பெருமை!
திருவிழா காலங்கள் மட்டுமின்றி நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயம் விசேஷ நாட்கள் என்றால் கூடுதலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (செப். 24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.
விடுமுறை தினத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிந்துள்ள ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் குளித்தும், நாழிக்கிணறு தீர்த்தத்திற்கு சென்றும் புனித நீராடி வருகின்றனர்.
மேலும், கோயிலில் கூட்டம் காரணமாக பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளிலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்கை வகுப்பதில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு...! விழா மேடையில் இந்தியா... பாரத்... குழம்பிப் போன அனுராக் தாகூர்!