ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,"தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். குடிசைகளே இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மழை இல்லாததை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நிலையை எண்ணி ரூ.2000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதை திமுக தடையாணை பெற்று தடுத்தது. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினர் ஜோதிடம் சொல்லி வருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது" என்றார்.