தூத்துக்குடி: காங்கிரஸ் சார்பில் "கரோனா நிவாரண இயக்கம்" என்ற இயக்கம் மூலமாக இந்தியா முழுவதும் கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிகள் செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியில் முன்களப் பணியாளர்கள் வட்டாரம், நகரத்துக்கு 10 பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று குறைகள் எல்லாம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி சார்பாக இரங்கல் கடிதம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பெருந்தொற்று காலத்தில் மெத்தனமாக இருந்த காரணத்தினால்தான் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா முதல் அலை வருவதற்கு முன்னரே பிற நாட்டு பயணிகள் மூலமாக இந்தியாவுக்குள் கரோனா பரவ வாய்ப்புள்ளது என ராகுல் காந்தி எச்சரித்தார். ஒன்றிய அரசு கரோனா தடுப்பூசி விவகாரத்தில் போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தேவையான தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்காத மோசமான சூழலை பாரக்க முடிகிறது.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தபோதும், தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் ஒன்றிய அரசு சரிவர செயல்படுவதில்லை.
இந்த சூழலில் கரோனா மூன்றாம் அலை வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இதை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய பேரழிவை நாம் சந்திக்க நேரும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது நம்மை அச்சுறுத்தும் விதமாக சென்று கொண்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மனித சமுதாயத்திற்கு அரசு செய்யும் துரோகம். அரசு இன்னமும், மக்கள் விரோத கொள்கைகளை விலக்கி கொள்ளாவிட்டால் மக்கள் எதிர்ப்பை பெரும் போராட்டமாக காங்கிரஸ் எடுத்துச்செல்லும். வரும் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பலகட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் சைக்கிள் பேரணி மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும். அதேபோல் கலால் வரியை குறைக்க வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.