மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். மக்களின் கருத்துரிமைகளை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'கருத்துரிமை பாதுகாப்பு இயக்கம்' என ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் குடிநீர் பற்றாக்குறை மிக பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. ஆனால், அதை மறுக்கும் விதமாக அமைச்சர் வேலுமணி பேசியது வேடிக்கையாக உள்ளது. சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய நான்கு நீர்நிலை தேக்கங்களிலும் மொத்தம் 0.23 சதவீதம் தான் குடிநீர் உள்ளது என்றார்.
இதனிடையே, பாஜக அரசின் நிதி ஆயோக் கூட்டத்தின் ஆய்வு அறிக்கையின்படி இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் 60 விழுக்காடு பகுதிகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 2030ஆம் ஆண்டுக்குள் தேவைக்கும் குறைவாக தான் குடிநீர் கிடைக்கும் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த எச்சரிக்கையை புரிந்துகொண்டு குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.