தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸட் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாவது நாளான இன்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மாநாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 370ஆவது சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் அகற்றியுள்ளது. அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்’ என்றார்.
மேலும் பேசிய அவர், மோடி அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கும் விரோதமாது என்றும், பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக இது உள்ளது எனவும் கடுமையாக விமர்சித்தார்.