எட்டயபுரம் அரசு மகளிர் பள்ளி ஆசிரியர், கடந்த வாரம் தேர்தல் பணிக்கு சென்ற போது கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் முடிவில் ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து, அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், ஆசிரியையின் சகோதரி, தந்தை உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அறிவுறுத்தலின்படி, சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகனின் வழிகாட்டுதலுடன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் வசித்து வரும் பெருமாள் கோவில் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தெருவில் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தெரு முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
இதே போல் எட்டயபுரம் நடுவிற்பட்டி அய்யம் பெருமாள் முதலியார் தெருவிலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்