தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் அவரது மனைவி மற்றும் அவரது தாயார் மூவரும் கரோனா அறிகுறியுடன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது சளி மற்றும் ரத்த மாதிரி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் மூவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியரின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக உள்ளார். அவர் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் அவருடன் பணிபுரியும் ஏழு ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி, சளி மாதிரிகள் நெல்லை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 7 பேரின் குடும்பத்தினரும் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பேட்மாநகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் 13 பேரும், நெல்லை மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணமடைந்த உள்நோயாளிகள் உடனடியாக ஆம்புலன்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்நோயாளிகள் சிலர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், வெளிநோயாளிகள் மருத்துவமனை வருவதற்கும் மருத்துவமனை நிர்வாகம் தடைவிதித்துள்ளது. தனியார் மருத்துவமனை சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிப்போம்: முதலமைச்சர்