தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட தசரா குழுவினருடன் திருச்செந்தூர் டிஸ்பி வசந்த் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.4) நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வருகிற 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
அவர்கள் மாலை அணிவித்து 21, 41, 101 நாட்கள் என காளி பறையில் விரதமிருந்து தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களான காளி, அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை, குறவன், குறத்தி, கருங்காலி, செங்காளி, ராமன், சீதை உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினத்துக்கு வருவது வழக்கம்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், தூத்துக்குடி என பல்வேறு இடங்களுக்குச் சென்று காணிக்கை பிரித்து 10ஆம் நாளான தசரா நாளில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.
இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15ஆம் தேதி கோலகாலமாக, வெகுவிமரிசியாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் மற்றும் தசரா குழுவினரின் நலன் கருதி அவர்களது முன்னேற்பாடுகள், பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ், வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டாட்சியர் வாமனன் மற்றும் கோயில் செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தசரா குழுவினருடன் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கார் பார்க்கிங் வசதிகள், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்வதற்கு எளிதான முறையில் ஏற்பாடுகள் செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த் வராஜ் கூறியதாவது, “குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை பொறுத்தமட்டில், வேடமணியும் பக்தர்கள் யாரும் சாதி ரீதியாக உடைகளோ, ஆயுதங்கள் எந்தியபடியோ வர அனுமதியில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வேடமணியும் தசரா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச நடனங்களை ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக் காலங்களில் கடந்த முறையை விட இம்முறை கூடுதலான பேருந்துகள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடம் காவலர்கள் அடிப்படைத் தேவைகளான கழிப்பறை, குடிநீர் வசதி கூட இல்லாமல் பள்ளிக்கூடங்களில் இருந்த நிலை இம்முறை ஏற்படாமல் பாதுகாப்பிற்காக வரும் காவல் துறையினருக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” எனக் கூறினார்.
மேலும், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, “ஒவ்வொரு வருடமும் நடைபெறக் கூடிய தசரா திருவிழாவை விட இம்முறை சிறப்பாக நடத்திட ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.