நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழ்நாட்டில் பறக்கின்ற விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது விமானத்தில் பயணம் செய்பவர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து நானும் விமானத்துறை அமைச்சரிடம் தெரிவிப்பேன்.
இடைத்தேர்தல் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வெற்றியானது அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கு அஸ்திவாரமாக அமையும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என விரும்புகிறேன். ஏராளமான சீன தயாரிப்பு பொருட்கள் விலை குறைவாகவும், மலிவாகவும் கிடைக்கிறது என்பதற்காக இந்தியா போன்ற பெரிய பொருளாதார சந்தை கொண்ட நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபர், இந்திய பிரதமர் சந்திப்பானது நாட்டு மக்களுக்கு பயனுள்ள நன்மைகளை வழங்கும் வகையில் இருப்பதாக அமைய வேண்டும். இந்தியாவை மேலும் சந்தை ஆக்குகிற சந்திப்பாக இருக்கக் கூடாது’ என்றார்.
தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என தெரிவித்த பிறகும் அவரது படத்தை, கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிமுக அமைச்சர்களை முற்றுகையிட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘பந்தியில் இடமில்லை என்று சொல்லிய பிறகும் உட்கார நினைப்பது நியாயமற்றது; நாகரிகமற்றது. கட்சியின் தலைவர் பெயரையோ, படத்தையோ பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய பிறகும் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டரீதியாக, ஜனநாயக ரீதியாக முறையற்றது. ஆகவே அதை உணர்ந்து ஆளுங்கட்சியினர் செயல்பட வேண்டும். மீறி செயல்பட்டால் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யலாம்’ என்று தெரிவித்தார்.