தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, காணொலி கண்காணிப்புக்குழு, செலவினங்கள் சரிபார்க்கும் கணக்கு குழு ஆகிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 4) நள்ளிரவு மேற்கண்ட குழுவினர் செய்துங்கநல்லூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியிலிருந்து வந்த காரை சோதனையிட்டனர்.
காரினுள் மதபோதகர் மோகன் சி லாசரஸ் இருந்துள்ளார். இந்தச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைக் கண்டுபிடித்தனர்.
இந்தப் பணத்தை நத்தம் நிலவரி திட்ட வட்டாட்சியர் நம்பிராயர் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல்செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருமான கோபால கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல்செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.