தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் சங்கரம்மாள்(30). கூலித்தொழிலாளியான இவருக்கு சுதர்சன் (12) என்ற மகன் உள்ளார். கணவர் இறந்ததால் அம்மா சுப்புலெட்சுமியுடன் (55) அவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் அதே பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரும், வட்டி தொழில் செய்து வருபவருமான பாண்டியிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதனை வட்டியும் முதலுமாக செலுத்திய பின்பும் பாண்டியும் அவரது மனைவி மகமாயி இருவரும் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து ஏப்ரல் 15 அன்று, இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தபோது பாண்டியின் மனைவி மகமாயி, சங்கரம்மாளின் வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசியும், அரிவாள்மனையை எடுத்து வெட்டவும் முயன்றுள்ளார். சங்கரம்மாள் மற்றும் அவரது மகன் அவரது தாயாரையும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படும் வகையில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.
தற்போது சங்கரம்மாள் மற்றும் அவரது மகன் சுதர்சன் இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கந்துவட்டி பிரச்னைகளால் நிறைய குடும்பங்கள் சீரழிந்துவரும் நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசும் காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரம்மாள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு