தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் சுமார் 240 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு விடுதியில் அளிக்கப்படும் சாப்பாடு தரம் இல்லாததால் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இன்று (ஜூலை 08) கல்லூரி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் விடுதியில் 200 மாணவர்களும், 40 மாணவிகளும் தங்கி படிக்கின்றனர். விடுதியில் சாப்பாட்டுக்காக சுமார் 2ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதற்கு எந்த ஒரு ரசிதும் வழங்கப்படவில்லை. தங்களுக்கு அளிக்கும் உணவுகள் தரம் இல்லாத உணவுகளையே தொடர்ந்து வழங்குகின்றனர்.
எங்கள் கல்லூரியில் வெளியே இருந்து வரும் ஆசிரியர்களும் எங்கள் விடுதியில் தான் வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். கல்லூரி வளாகத்துக்குள் அமைந்திருக்கும் மூன்று ஆண்டு பயிலும் பட்டப் படிப்புக்கான மாணவர்களும் எங்கள் விடுதியில் தான் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். அதற்கும் எங்கள் கணக்கில் தான் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்லிமிடெட் சாப்பாடு வழங்கப்படும் என கூறிய நிலையில் தற்போது லிமிட் சாப்பாடு தான் வழங்குகின்றனர். தரமான அன்லிமிடெட் சாப்பாடு வழங்க வேண்டும் இது குறித்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து - 6 பேர் உயிரிழப்பு