தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள வெங்கடேஸ்வரா ஏஜென்சியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய்யை ஏற்றிகொண்டு கோவில்பட்டிக்கு வந்தது. லாரியை தங்க பாண்டி என்பவர் ஓட்டி வந்தார்.
கோவில்பட்டிக்கு வந்த பிறகு டெலிவரி செய்வதற்காக ஓட்டுநர் தங்கபாண்டி, தார் பாயை எடுக்க லாரியின் மேல் ஏறினார். அப்போது, தார்பாயால் மூடப்பட்டிருந்த நிலையில் சினிமா பட பாணியில் தார்பாயை கிழித்து எண்ணெய் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லாரியின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உரிமையாளர் கணேசன், இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
![சமையல் எண்ணெய் திருட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-08-edible-oil-theft-from-lorry-vis-script-7204870_04112020200816_0411f_1604500696_956.jpg)
அதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், லாரியில் ஏறி சோதனையிட்டனர். அப்போது லாரியின் மேல் போடப்பட்டிருந்த தார்பாய் கிழித்து எண்ணெய் திருடப்பட்டிருந்ததை காவல்துறையினர் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, லாரி மீது ஏறி எண்ணெய் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு லட்சம் மதிப்புள்ள எண்ணெய் பெட்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.