தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே கண்ணப்பன் என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்ட இரவு நேர காவலர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விளாத்திகுளம், கழுகுமலை ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்தன.
மூன்று தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகே தீயை கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்த நிலையில், உள்ளே இருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளும் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில், கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின.
மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கர தீவிபத்து - 8 வாகனம் சேதம்