தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்ட மணி மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, சிவந்தி ஆதித்தனாரின் சிலையை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது தியாக சீலர்களின் தியாகம்தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலமாக 4 ஆயிரத்து 399 பயனாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 23 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 5,188 பயனாளிகளுக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
பருவமழை பெய்து சேமிக்கப்படும் மழை நீரானது வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 39 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து பணி 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெறும் குடிமராமத்துப் பணிக்காக 11 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அம்மா மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் மூலமாக 5 ஆயிரத்து 451 பயனாளிகளுக்கு 13.75 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 19.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களின் உயர்கல்விக்காக மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக இதுவரை 22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி உள்ளிட்ட கிராமப்புற சாலை மேம்பாட்டுக்காகவும், கட்டுமானத்திற்காகவும் 3.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் விதமாக முக்கனியில் 25.75 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 6944 பயனாளிகளுக்கு 32 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் 10.80 கோடி ரூபாய் மதிப்பில் 180 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்" எனக் கூறினார்.
இதையடுத்து தூத்துக்குடி சென்ற அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பண்ணோக்கு உயர் மருத்துவ சிகிச்சை பிரிவுகளை தொடங்கி வைத்தார். ரூ.50 லட்சம் மதிப்பில் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மையம், ரூ. 14 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம், ரூ.4.13 கோடி மதிப்பில் கேத் லேப் இருதய நோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவுபெற்ற ராஜாஜி பூங்கா வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதையும் பார்க்க: டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம்: முதலமைச்சர் திறந்துவைப்பு