தூத்துக்குடி: 'சத்ரு சம்ஹார பூஜை' என்பது, நாம் பக்தியுடன் போற்றும் முருகப் பெருமான் என்னும் சுப்பிரமணியரின் அம்சமான சூரசம்ஹார மூர்த்திக்கு செய்யப்படும் ஹோம வழிபாடாகும். தெய்வ தம்பதிகளான சிவபெருமான்-பார்வதி தேவியின் மகனாக அவதரித்த சுப்பிரமணியரை, பெரும் சக்தி வாய்ந்த தெய்வமாக, பண்டைய ரிக் வேதம் போற்றுகிறது. தூய அன்பின் அடையாளமாகவும் திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர்.
சத்ரு சம்ஹார ஹோமம், எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் வழிபாடு. இதன் மூலம் வெளிப்படும் பெரும் ஆற்றல் நம்மை பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கவசமாக விளங்குகிறது. சத்ரு சம்ஹார ஹோமத்தின் மூலம், பகவான் சுப்பிரமணியரின் அருளை நாம் பெறலாம். இதன் மூலம் தெய்வ சாபங்கள், நவக்கிரக தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மனச் சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதனால் அனைத்து தீய சக்திகளிடமிருந்தும், தெய்வீகப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்செந்தூரில்தான் சூரசம்ஹாரம் நடந்து சூரபத்மனை வதம் செய்து, அதர்மத்தை அழித்து தர்மம் நிலைநாட்டப்பட்டதாக ஐதீகம். அத்தகைய திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார மூர்த்திக்கு இந்த ஹோமம் செய்வது சிறப்பு.
பல்வேறு தலைவர்கள் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியுள்ளனர்; திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையில் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் திருச்செந்தூர் சென்று யாகம் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.
அதன்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இலங்கையின் முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச உள்ளிட்ட பல நாட்டு அரசியல் பிரமுகர்கள் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், சுதாகரன் மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களும் யாகம் செய்துள்ளனர். கோயில் வளாகத்தில் யாகம் நடத்த அனுமதியில்லை; அதாவது தடை என்று கூறப்பட்ட நிலையில், கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் யாகம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டது. பின்பு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் இணைந்து இரட்டைத் தலைமையுடன் செயல்பட்ட நிலையில், இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்ததாகவும், ஓ.பி.எஸ் கட்சி கொள்கையை மீறியதாகவும், இதன் காரணமாக ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டு பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இதை எதிர்த்து ஓ.பி.எஸ் அணியினர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சிப் பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.
முதல்கட்டமாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி உண்மையான இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினார். அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களை தொடர்புகொண்டு, ''எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். பணிகளை தீவிரப்படுத்துங்கள்'' என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், ஓ.பி.எஸ் சமீபத்தில் டி.டி.வி தினகரனை சந்தித்தார்.
சசிகலாவை விரைவில் ஓபிஎஸ் சந்திப்பதாகவும் கூறி பல்வேறு இடையூறுகள் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து கட்சியினரிடம் அதிமுக பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதிக உறுப்பினர் சேர்க்கையால் நமது அணியை பலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார், எடப்பாடி பழனிசாமி . சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலியை கண்டித்தும் முறைகேடுகளை விசாரணை செய்யக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தது கவனத்தை ஈர்த்தது.
முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பாணியில் தவறு செய்வோர் உடனடியாக தண்டிக்கப்படுவதும் தி.மு.க எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவதும் தீவிரம் அடைவதாகத் தெரிகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கிடையே மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அ.தி.மு.கவின் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு சிறப்புற நடைபெறவும், பா.ஜ.கவுடனான கூட்டணி உறவை வலுப்படுத்தும் விதமாக பிரச்னைகள், எதிரிகளின் வினைகளை வலுவிழக்கச் செய்து வெற்றி காணும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார மூர்த்தி சந்நிதியில் ''சத்ரு சம்ஹாரா அர்ச்சனை'' செய்யுமாறு எடப்பாடி பழனிசாமியின் ஆஷ்டான ஜோதிடர் கூறியுள்ளாராம். 2 நாளில் முடிவாகி தரிசன ஏற்பாடுகள் முடிந்தது. ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர் கோட்டை மணிகண்டனே பார்த்துக் கொண்டார்.
அதன்படி அவரின் ராசி, நட்சத்திரப்படி சனிக்கிழமை (8ம் தேதி) காலை 9.20 மணிக்கு திருச்செந்தூர் வந்தார், எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர், தக்ஷிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சூரசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் அவர், எதிரிகளை வீழ்த்தக்கூடிய ''சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை'' செய்து வழிபாடு நடத்தினார்.
வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்பதால் 3 நாட்கள் விரதம் கடைபிடித்திருக்கிறார். அதனால், அவரால் இயல்பாக கோவில் படிகளில் நடக்க முடியவில்லை. சூரசம்ஹார மூர்த்தியிடம் அர்ச்சனை நடைபெற்ற போதிலும், சந்நிதி படிக்கட்டில் அமர்ந்து சோர்வாகவே காணப்பட்டார். வரவேற்புகளை திருச்செந்தூரில் இருந்து தரிசனம் முடித்துவிட்டு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் வழியில் வைத்துக் கொள்ளலாம்.
எனக்கு பூஜைதான் முக்கியம்.. வரவேற்பு, உபசரிப்பு இரண்டாவதுதான் என்ற நிலையில், அவர் போகும் போது எந்த வரவேற்பும், ஆரவாரமும் இல்லாமல் பூஜையை நடத்தி முடித்துவிட்டு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் வழியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சத்ரு சம்ஹார பூஜையைத் தொடர்ந்து இனி எடப்பாடியாருக்கு ஏறு முகம் தான் என அதிமுகவினர் குதூகலம் அடைய தொடங்கி விட்டனர்.
இதையும் படிங்க: “ஊதுகோலாக கவர்னர், நேத்து பெய்த மழையில முளைத்த காளானாக தலைவன்” - பாஜகவை சாடிய கீதாஜீவன்!