தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு செய்துவருகிறது. அத்தியாவசிய பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது தரமில்லாமல் விற்பனை செய்தாலோ அந்தக் கடைகள் சீல் வைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு பால், தண்ணீர் மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் 100 சதவீதம் கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் நடவடிக்கைகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2000 பேரில் 300 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...மருத்துவர்களுக்கான முழுக்கவச உடை தயாரிப்பு பணி தீவிரம்!