தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எல்இடி திரை கொண்ட வாகன பரப்புரையை அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று (மார்ச்.10) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: "வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் மூலமாக கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மற்றும் அரசியல் கட்சியினரின் தொப்பிகள், கரை வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாளை (மார்ச்.12) முதல் அந்தந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாங்க உள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 100 மீட்டருக்குள் இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது கரோனா நெறிமுறைகள் முழுமையாகக் கடைபிடிக்கப்படும். வேட்பாளர்கள் செய்யும் செலவுகளுக்காக தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி செலவுகளை கணக்கு பராமரிக்கவேண்டும். 30 லட்ச ரூபாய் மட்டுமே வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பதற்காக இரண்டு தொகுதிக்கு ஒரு ஐஆர்எஸ் நிலையிலான அலுவலர்கள் செலவின பார்வையாளர் நாளை வரவுள்ளார்.
மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக பொது பார்வையாளர் வரும் 19ஆம் தேதி வரவிருக்கிறார். ஆறு தொகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக காவல் கண்காணிப்பாளர் நிலையிலான ஒரு அலுவலர் வர உள்ளார்.
வேட்பாளர்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் அனுமதியின்றி பரப்புரை செய்யக்கூடாது. பரப்புரை செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களுடன் தேர்தல் ஆணையத்தின் 'சுகிதா' தளத்தின் மூலமாக அனுமதி பெற வேண்டும்" எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, உடனிருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார், தேர்தலில் முறைகேடு செய்தது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரோந்துப் பணியின்போது கொலை செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. உதவி காவல் ஆய்வாளர் பாலுவின் மனைவி பேச்சியம்மாளுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவியும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க:குஷ்பூவின் கனவு கலைந்ததா..? சேப்பாக்கத்தில் பாமக போட்டி