தூத்துக்குடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நேற்று 7.4 சென்டிமீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 80 மில்லி மீட்டர் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி - செக்காரக்குடி இடையே உள்ள சாலையில் தமிழக அரசு சார்பில் 3 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதை (தற்காலிக பாலம்) வழியாகச் சென்று வந்தனர். தற்போது இந்த மாற்று பாதை மேல் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
கீழசெக்காரக்குடி, மேல செக்காரக்குடி, ஆலந்தா கிராமம், சிங்கத்தாக்குறிச்சி, மீனாட்சிபுரம், மணியாச்சி தட்டப்பாறை ஆகிய ஊர்களுக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 3 தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சேரந்தையன் கூறுகையில், “40 வருடமாக இது ஒரு கனவு பாலமாக இருந்து வருகிறது. அவசரக் காலத்தில் மருத்துவ உதவிக்கும், பள்ளிக்கூடம் போவதற்குப் பாலம் வசதியாக இருந்த வந்த நிலையில் தற்போது பாலம் இடிந்து விழுந்ததுள்ளது. இந்த பாலம் போடும் பணி ஜனவரி மாதம் தொடங்கி இருந்தால் இந்நேரம் பணிகள் முடிவு பெற்றிருக்கும். ஆனால் நேரம் கடத்தி பாலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயத்திற்கு அப்பாற்பட்டு வெளியூர் சென்று 80% பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பணிக்கு, பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயங்கவில்லை. எனவே அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தரமான மண் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை!