தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் ஏழு லட்சம் மதிப்பிலான, 420 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எட்டயபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷூக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பொன்ராஜ், விஜயராஜ் தலைமையிலான காவல்துறையினர், எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகக் காய்கறி ஏற்றி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காலிபிளவர் காய்கறி மூட்டைகளுக்குள் ரூபாய் ஏழு லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருள்கள், 24 சாக்கு பைகளில் 420 கிலோ பதுக்கி, கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் பான் மசாலா, புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா முகம்மது வழக்குப் பதிவு செய்து, விளாத்திகுளம் பனையடிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த கண்ணன், பழனிவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கூறுகையில்," புகையிலைப் பொருட்கள் கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த பெண் தற்கொலை!